தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! திருமணம் செய்யத் தயாராக இருந்த பெண் சாவு!! – வருங்கால கணவர் உட்பட எழுவர் படுகாயம்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் இன்று அதிகாலை 8 பேரை ஏற்றிச் சென்ற வான் ஒன்று குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த மற்ற மூவரும் சிறுவர்கள் எனவும், அவர்கள் மூவரும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13, 11 மற்றும் 7 வயதுடைய மூன்று குழந்தைகள் இவ்வாறு காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் வணிகத்துறையில் பணிபுரிந்து வருபவர் ஆவார்.

புஷ்பகுமாரி சந்தமாலி (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி பெண், டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்தார் என்று தெரியவந்துள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண், வெளிநாட்டில் இருந்து தனது வருங்கால கணவரை அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளம் பெண் வானின் முன் இடது இருக்கையில் பயணித்தார் எனவும், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளைஞர் வானின் ஓட்டுநராக இருந்தார் எனவும், அவரும் விபத்தில் படுகாயமடைந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் வான் கடுமையாக சேதமடைந்துள்ளது என்றும், லொறியின் பின்புற வலது பக்கம் சிறிய சேதத்தைச் சந்தித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வானின் ஓட்டுநர் நித்திரை கொண்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
………………

Leave A Reply

Your email address will not be published.