அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிமல் – சிறீதரன் வாய்த்தர்க்கம் – வடக்கில் காணி விடுவிப்பை அரசியல் மயப்படுத்த இடமளியோம் என்று அமைச்சர் சூளுரை.

“வடக்கில் போர்க் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது. வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்திருக்கின்றனர். எனவே, அவர்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளை விட எமக்குப் பொறுப்புக்கள் அதிகம்.”

இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் கூட்டப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, வடக்கில் காணி விடுவிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பிய போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறீதரன் எம்.பி. உரத்த குரலில் கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த அமைச்சர் பிமல், “எனக்கு உங்களை விட உரத்த குரலில் பேச முடியும். உங்களுக்கு தேவையான பிரசாரம் கிடைத்து விட்தென நினைக்கின்றேன். எனவே தற்போது நான் கூறுவதைக் கேளுங்கள்.” – என்றார்.

காணி விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரஸு காணிகளை விடுவிக்க வேண்டும் என்று சுமந்திரன் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகின்றார்.

அரசு எங்குமே நேரடியாகச் சென்று காணிகளை விடுவிப்பதில்லை. இந்தக் காணிப் பிரச்சினையை நாம் அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. 30 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த வீதிகளை நாம் திறந்திருக்கின்றோம். அதற்காக நாம் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை.

இராணுவக் கட்டளைத் தளபதிகளால் காணி உரிமங்கள் மாவட்ட அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு நாம் பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை.

அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு காரணிகளுக்காகவே மக்களின் இடங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாதுகாப்பு காரணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளைப் பாதுகாப்பு தேவை இல்லாபட்சத்தில் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.

அவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கு வைபவங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை கிடையாது. நாம் அவ்வாறு செய்யாத நிலையில், சிலர் சென்று எம்மால் தான் காணி விடுவிக்கப்பட்டது எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். வடக்கில் உள்ள மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர்.

எனவே, உங்களை விட எங்களுக்கு அதிக பொறுப்புக்கள் உள்ளன. நாம் மக்களுக்காகச் சேவையாற்றுவோம். ஏனைய ஆட்சிக் காலங்களை விட நாம் வடக்குக்கு அதிக அபிவிருத்திகளை முன்மொழிந்திருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.