இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று தேரேறி வந்தான் நல்லூர் கந்தன்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 7 மணியளவில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருள்வதற்காக வெளி வீதிக்கு எழுந்தருளினார்.

பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த திரளான பக்தர்கள் காலை 7.30 மணியளவில் திருத்தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர்.


தொடர்ந்து இடம்பெற்ற பக்திபூர்வமான நிகழ்வுகளை அடுத்து, காலை 8.30 மணியளவில் திருத்தேர் தனது நிலையிடத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, முருகப்பெருமான் பச்சை சாத்தப்பட்டுப் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் மீண்டும் ஆலயத்துக்குள் பிரவேசித்தார்.

இன்றைய தேர்த் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டுகளித்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் மற்றும் கற்பூரச் சட்டிகள் ஏந்துதல் போன்ற தங்களது நேர்த்திக் கடன்களை பக்தியுடன் நிறைவேற்றிச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.