இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது! வடக்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவிப்பு.

இந்தியாவை மீறி மாகாண சபை முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என்று சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்தத் தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

“வன் டெக்ஸ்ட்” நிறுவனத்தின் அனுசரணையில், கடந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாகாண சபையின் உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மாகாண சபையின் கடந்த கால அனுபவம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ். ரில்கோ விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் பின்னர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் க.சர்வேஸ்வரன், தமிழரசுக் கட்சி சார்பில் இ.ஆர்னோல்ட், ஈ.பி.டி.பி. சார்பில் வை.தவநாதன், புளொட் சார்பில் பா.கஜதீபன், ரெலோ சார்பில் சபா. குகதாஸ் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது மேற்கண்டவாறு கூறிய அவர்கள், மேலும் தெரிவிக்கையில்,

“இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்தது. இதன்போது முக்கிய விடயமாக மாகாண சபைத் தேர்தல் பின்னோக்கிச் செல்வதற்கான ஏதுநிலைகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் இருந்து ஆராயப்பட்டது.

குறிப்பாக அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசு மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே இருக்கின்றது.

கடந்த காலங்களில் இந்த அரசின் நிலைப்பாடு மாகாண சபை முறைமைக்கு எதிரானதாகவே இருந்தது.

குறிப்பாக தேர்தலைப் பழைய முறையிலா, புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தைக் கையிலெடுத்து அரசுகள் காலத்தைத் தாழ்த்தி வருகின்றது.

புதிய முறைமை என்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடு நீக்கப்பட்டால் அல்லது சீர்செய்யப்பட்டால்தான் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

ஆனால், பழைய முறைமையில் நடத்துவதாயின் அது இலகுவானது. நாடாளுமன்றில் அதற்கான அனுமதியைப் பெரும்பான்மையுடன் இந்த அரசு சுலபமாகப் பெற முடியும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் முழுமையான தீர்வாக மாகாண சபை முறைமை இல்லாதுவிடினும் அதுவே தீர்வின் ஆரம்பமாக இருக்கின்றது.

அதனால்தான் அரசுகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அக்கறை காட்டுவதில்லை. அதையே இந்த அரசும் செய்கின்றது.

மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களுக்கு அவர்களது இருப்புடன் தொடர்புடைய ஒன்று. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அது அவசியமற்றதாக இருக்கலாம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு விரும்மாவிட்டால் குறைந்த பட்சம் இதை வடக்கு, கிழக்கிலாவது நடத்த வேண்டும். இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றன.

எமது அரசியல் உரிமை குறித்து சர்வதேச சமூகம் பேசுகின்றது. இதை இந்திய அரசும் ஐ.நாவில் வலியுறுத்துகின்றது.

குறிப்பாக ஐ.நாவின் தற்காலிக வரைபில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலுயுறுத்தப்படுகின்றது.

இதனால் இந்த விடயம் தற்போது சர்வதேச குரலாக இருக்கின்றது. அதனால் மாகாண சபை முறைமை நீக்கப்படாது. நீக்கப்பட்டால் இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும் ஒரு சம்பவமாக உருவாகிவிடும். அதனால் மாகாண சபை முறைமையை நீக்க அரசு முயலாது.

அதேநேரம் புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு முழுமையாகக் கிடைக்குமாக இருந்தால் மட்டுமே மாகாண சபை முறைமையை இல்லாது செய்யும் சாத்தியம் ஏற்படும்.” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.