கோர விபத்தில் சிக்கிய இளைஞர் 21 ஆவது பிறந்தநாளில் உயிரிழப்பு.

கோரவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியாவின் ஹாவா எலியா பகுதியைச் சேர்ந்த மனித் அபுர்வ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் ஹாவா எலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகள், தனது வீட்டில் இருந்து நுவரெலியா நகருக்குள் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், அந்தச் சந்தியில் இருந்து நுவரெலியா நகருக்குள் செல்ல முற்பட்டபோது, இராகலையில் இருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் 21 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

இவர் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர இனத்தைச் சேர்ந்த பிராந்திய செய்தியாளர் சம்பத் ஜெயலாலின் ஒரே மகன் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.