மன்னார் மாவட்டம் இன்று முடங்கும்!

மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை பொது முடக்கம் நடைபெறவுள்ளது.

காற்றாலை திட்டத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்துமே பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“மன்னார் மாவட்ட மக்கள் இன்று திங்கட்கிழமை அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும், போக்குவரத்துச் சேவையை நிறுத்துவதுடன், வர்த்தக நிலையங்களையும் மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எங்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டுகின்றோம்.” – என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.

“அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவோரும் கடமைகளுக்குச் செல்லாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இதேநேரம், இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமாகும். இந்தப் பேரணி மன்னார் பஜார் பகுதியை அடைந்து, அங்கு எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்படும். மதியம் 1.30 மணி வரை இந்தப் பேரணி நடைபெறும். இறுதியாக, ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்படும்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.