மன்னாரில் ரயில் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ஏ. சரத் அந்தோனி (வயது 60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுக் காலை பயணித்த ரயில், சௌத் பார் ரயில் நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்தது.

இதன்போது சௌத்பார் – தள்ளாடி ரயில் வீதி, இரட்டை கண் பாலத்துக்கு அருகில் ரயிலில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் காணப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தைபி பார்வையிட்டார்.

சடலமாகக் கிடந்தவரின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வைத்து அந்த நபர் டபிள்யூ.எம்.ஏ. சரத் அந்தோனி (வயது 60) எனவும், நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டது.
அவரது உடமையில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 27 ஆம் திகதியிடப்பட்ட தலைமன்னாருக்கெனப் பெற்றுக்கொள்ளப்பட்ட 205 ரூபாவுக்கான ரயில் டிக்கெட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.