எனது கடவுள் பிரபாகரன்! என்னைப் பைத்தியம் என்று கூறுவதால் கவலையில்லை; பிணையில் விடுவிக்கப்பட்ட அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு.
“மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால், சிங்கள மக்கள் தமக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர்..”
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
கொழும்பு, கோட்டையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்து தவறான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பி. கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் நேற்று நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் தலைவர் அல்லர், ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக் கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர். ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன். நாமல் தவறிழைத்துள்ளார் எனில் அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதனை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம். தும்புத்தடி எழுந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாக சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நான் தும்புத்தடியாக இருக்கின்றேனா அல்லது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் அவ்வாறு இருக்கின்றார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். ஒன்றில் என்னைக் கைது செய்வர். அல்லது சாமர சம்பத் தசநாயக்கவைக் கைது செய்வர். நாம் இருவரும் இல்லை என்றால் ஆளுங்கட்சிக்கு அரசியலும் இல்லை. பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வி எழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்குத் தெரியும். என்னைப் பைத்தியம் என்று கூறுவதால் எனக்குக் கவலையில்லை.” – என்றார்.
