பாதுகாப்பு வாகனத்தை ஒப்படைத்தார் மஹிந்த.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு வாகனத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துள்ளார் என்று மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வாகனத்தை ஒப்படைக்கும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்றும் மனோஜ் கமகே கூறியுள்ளார்.
இந்தப் பாதுகாப்பு வாகனம், துப்பாக்கிச்சூடு மற்றும் ஏனைய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு வாகனத்தை அரசிடம் ஒப்படைத்ததால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தில் இருந்து கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காகப் பல அரசியல்வாதிகள், நாடாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்டன் இல்லத்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
