பொலிஸாரின் சட்ட முரணான செயற்பாடுகளைக் கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போர்.
முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்து வரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ். மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடந்த 5 ஆம் திகதி முறையற்ற வகையில் காணி ஒன்றுக்கு உரிமம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கூறி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரைக் கைது செய்யும் முகதாவில் வீட்டுக்குள் நுழைந்த யாழ்ப்பாணம் விசேட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், அந்த வீட்டில் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரம் எதுவுமின்றி தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக நடந்து கொண்டனர்.
இந்தச் சட்ட முரணான செயற்பாட்டைக் கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன்,

“இந்தப் போராட்டம் சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதை கண்டிப்பதானதல்ல. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அந்தச் சட்டத்தை சரியான தேடுதல் ஆணை இல்லாது மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இந்தச் செயற்பாடு பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டையே காட்டுகின்றது.
எனவே, சட்டத்தரணிகளுக்கு எதிராக அல்லாது பொதுமக்களுக்க எதிராக, பொலிஸார் முன்னெடுக்கும் சட்ட முரணான செயற்பாடுகளைக் கண்டித்தே இன்று வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை இன்று முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்கின் சட்டத்தரணிகளும் சில மணி நேரம் இன்று பணிப்புறக்கணிப்பைச் செய்து எமது போராட்டத்தை வலுப்படுத்தினர்.
எனவே, சட்டத்தை முன்னெடுக்க முனையும் பொலிஸார் அதைச் சட்ட ரீதியாக முறையான வகையில் மேற்கொண்டு நீதியை வழங்க அல்லது குற்றவாளி எனச் சந்தேகிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்.” – என்றார்.
