நான் ஜனாதிபதியாக வந்திருந்தால் முதலில் மஹிந்தவைச் சிறையில் அடைத்திருப்பேன்! – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு.
“தங்காலை – கால்டன் இல்லத்தில் வெறும் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளை வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம இல்லத்திலும், ஜனாதிபதி மாளிகையிலும் பயன்படுத்திய தளபாடங்கள் மிகப் பெறுமதி மிக்கவை. அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். நான் ஜனாதிபதியாகியிருந்தால் முதலில் அதற்காக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன்.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் ஊழல்களை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகிக்கின்றது. ஊழல், மோசடிகள் வரையறைகளைத் தகர்த்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இவர்கள் ஊழல்களைக் கைவிட மாட்டார்கள்.
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் அரசிடம் கையளிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான சட்டத்தரணி விஜேராம இல்லத்தில் அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள பொருட்கள் இருப்பதாகவும், அவை அரசால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னரே தமது தனிப்பட்ட பொருட்களை அங்கிருந்து அகற்ற முடியும் என்றும் கூறுகின்றார்.
உத்தியோகபூர்வ இல்லத்தை மீள் புனரமைப்பதற்காக 50 கோடி பொது நிதியைச் செலவிட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்தப் பணத்தில் ஒரு ஏணியையாவது வாங்கியிருப்பார் என்று நம்புகின்றீர்களா?
தனது கால்டன் இல்லத்தில் வெறும் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளை வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, விஜேராம இல்லத்திலும், ஜனாதிபதி மாளிகையிலும் அதனை விடவும் பெறுமதியான தளபாடங்களையே வைத்திருந்தார். அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
நான் ஜனாதிபதியாகியிருந்தால் முதலில் அதற்காக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன். 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்ய முடியும்.
அவர்கள் மீது பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், விஜேராம மாவத்தையிலுள்ள அந்தப் பொருட்களை எவ்வாறு கொள்ளையிடுவது என்பதே மஹிந்தவின் சிந்தனையாகவுள்ளது.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஊழலை ஒழிப்பதாகப் பெருமிதம் கொண்டாலும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவர்கள் நாட்டை மேம்படுத்தியதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் நாட்டுக்குச் சேவையாற்றியதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அன்றைய தினத்தில்தான் இந்த அரசு மக்களுக்காகச் செயற்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வோம். எமக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் உண்மையைக் கூற நாம் அச்சப்படுவதில்லை.” – என்றார்.
