36 ஆண்டுகால அவலம் முடிவுக்கு வர வேண்டும்” சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி வலி. வடக்கில் மக்கள் வீதிப்போராட்டம்!

முப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகியவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்கள், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது நிலங்களை மீளக் கையளிக்கக் கோரியே இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக எமது சொந்த நிலங்களும் வீடுகளும் இராணுவத்தினரின் வசமே காணப்படுகின்றன. பொதுமக்கள் குடியிருக்க வேண்டிய நிலங்களில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும் வர்த்தக நிலையங்களையும் அமைத்துத் தமது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் எமது மக்கள் சொந்த நாட்டிலேயே நிலமற்றவர்களாகவும், தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் அகதிகளைப் போல வாழும் சோக நிலை தொடர்கின்றது. எனவே, எமது வீடுகளையும் காணிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று வலியுறுத்தினர்.

இன்று காலை பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் மக்கள் திரண்டு இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய சுலோக ஏந்திகளையும் ஏந்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.