இளம் தம்பதியர் சுட்டும் வெட்டியும் படுகொலை: கைதான 4 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்…
அம்பாந்தோட்டை, ஹூங்கம பகுதியில் வீடொன்றினுள் 28 வயதான இளம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல ரன்ன பகுதியில், உள்ள வீடொன்றினுள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்த இளம் தம்பதியினரைக் கொடூரமான முறையில் படுகொலை செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸார் மற்றும் தங்காலை குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குற்றச் செயலுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
35 வயதுடைய பெண் ஒருவரும், 27 தொடக்கம் 33 வயதுடைய 3 ஆண்களும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதான நபர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி, போர் 12 ரக 2 தோட்டாக்கள் மற்றும் ஒரு வெற்றுத் தோட்டாவும், 2 வெட்டுக் கத்திகளும் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடும், கூரிய ஆயுதங்களால் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளமை பிரதேச பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் கஹந்தமோதர பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் நேற்று அங்குனுகொலபெலஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
