அமைச்சர் வசந்த சமரசிங்க உடனே பதவி விலக வேண்டும் – உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரும் நிலையில், நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மூலப்பொருள்களும் மிக வேகமாகக் விலை உயர்ந்து வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான பெரிய முட்டை ஒன்று தற்போது 46 – 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபா வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல், முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.

கீரி சம்பா அரிசிச் சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை. அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். அவருக்குப் பொலிஸ் பணியைச் செய்ய விருப்பமாக இருந்தால், பொலிஸ்மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும்.

அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது, விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே வழிவகுக்கும். மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல் கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.

தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.