பேச்சுகளின் பின்னரே அமைச்சரவையில் மாற்றம்.
“நான் எதிர்க்கட்சியினரிடம் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வேலை செய்யபவன் அல்லன். பேச்சுவார்த்தைகளின் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுகள் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு அநுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக நேற்று பதவியேற்ற பிமல் ரத்நாயக்க, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினாரா.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சியினர் நாங்கள் செய்த நல்ல விடயங்களைப் பாராட்டியதும் இல்லை. அவர்கள் இணைந்து செயற்பட்டதும் இல்லை. கள்வர்களைக் கைது செய்யும்போதே அவர்கள் இணைந்து செயற்பட்டனர்.
நான்கு – ஐந்து மாதங்கள் பேச்சுவார்த்தைகளின் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரம், தேசிய ஒருமைப்பாடு, போதைப்பொருளைக் கட்டுப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தல், அரச சேவையைத் துரிப்படுத்தல் போன்ற முன்னிலை காரணங்களைக் கருத்தில் கொண்டு பல பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதிய திறமையானவர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு வழங்குவதென்ற பொது இணக்கப்பாட்டின் பிரதிபலனே இந்த மாற்றம்.
இந்தப் புதிய அமைச்சுகள் பாரிய பொறுப்பாகும். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சுகள் பெரும் சவாலானதாகும். இதில் மக்கள் தொடர்புகள் குறைவானதாகும். ஆனால், நகர அபிவிருத்தி மக்களுடன் தொடர்புபட்டதாகும். அதனால் வேலைத்திட்டங்கள் அதிகமானதாகும்.
இந்த அமைச்சில் இதற்கு முன்னர் இருந்தவர்கள் அமைத்துள்ள திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே எனது வேலைத்திட்டமாக இருக்கும்.” – என்றார்.
