சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டார்.

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியமைக்கான சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவத்தை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன என்று சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில், அந்தப் பெண் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் நேற்று திங்கட்கிழமை உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது அந்தப் பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதுடன், முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக் கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

அவரது நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் பிரகாரம் பெண்ணின் முகத்தில் எரியூட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, மேற்படி பெண் தனது கணவருக்கு வவுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்குச் செல்வதாகக் கூறி சென்றார் எனவும், வீட்டை விட்டு அவர் செல்லும்போது சுமார் 10 பவுண் நகைகளை அணிந்திருந்தார் எனவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சடலமாக மீட்கப்பட்ட வேளை அவரது சடலத்தில் நகைகள் எவையும் காணப்படவில்லை.

இந்தக் கொலைச் சம்பவம் நகைக்காக மாத்திரம் நடைபெற்றதா? அல்லது வேறு பின்னணிகள் உள்ளனவா? என்று பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவாகக் கூற முடியாதுள்ளது எனவும், சடலம் நீண்ட நேரம் நீரில் மிதந்தமையால் அவற்றை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.