சகலரினதும் சுதந்திரம், கண்ணியத்தை பாதுகாக்கும் நாட்டை உருவாக்குவோம்! – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர உறுதி.
“அனைவரும் தங்கள் அனைத்து சிவில் – அரசியல் – கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.” – என்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“உலகெங்கிலும் வாழும் இந்து மக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது.
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தைத் தோற்கடித்து அநீதியை வென்றது போன்று அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்தக் கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கின்றது. தற்போது நம் முன்பாக உள்ள பெரும் சவால் போன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் போதைப்பொருள், மறைந்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும் அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.
இதேபோல், நமது பிரஜைகள் மட்டுமன்றி இந்த நாட்டில் வசிக்கும், வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதிக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புக்காக அரசு என்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.
அனைத்து மதவாத, இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும் அனைவரும் தங்கள் அனைத்து சிவில் – அரசியல் – கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகின்றேன்.
தீபாவளி உண்மையிலேயே ஓர் ஒளிப் பண்டிகை. தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பிலான இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பிரார்த்தித்து இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களைப் பிரகாசமாக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.
