‘தீதும் நன்றும்’ சிறுகதைத் தொகுதி லண்டனில் அறிமுகம்.
விமல் பரம் அவர்களின் ‘தீதும் நன்றும்’ சிறுகதைத் தொகுதி லண்டனில் அறிமுகம்.
விமல் பரம் அவர்கள் எழுதிய ‘தீதும் நன்றும்’ சிறுகதைத்தொகுதி கடந்த சனிக்கிழமை லண்டனில் மண்டபம் நிறைந்த மக்கள் நடுவே அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வணக்கம் லண்டன் அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் கடந்த11.10.2025 சனிக்கிழமை மாலை இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இலண்டனில் youth centre St Andrew’s church hall Malvern Avenue, South Harrow என்ற மண்டபத்தில் எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமாகிய திருமதி மாதவி சிலலீலன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. வரவேற்புரையை திருமதி சுகுணா சுதாகரன் நிகழ்த்த அறிமுக உரையை திருமதி திருமகள் சிறிபத்மநாதன் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலின் கதைகளை முன் வைத்து திருமதி. அகல்யா நித்தியலிங்கம் ‘பெண்களின் வாழ்வியல்’ என்ற தலைப்பிலும், திரு. திருப்பரங்குன்றன் சுந்தரம்பிள்ளை ‘முதியோர் வாழ்வியல்’ குறித்தும், திருமதி. ஜெயஶ்ரீ சதானந்தன் ‘சமூக வாழ்வியல்’ பற்றியும் தமது உரைகளை ஆற்றினார்கள்.

நூலாசிரியர் தனது ஏற்புரையில் தான் எழுத வந்த சூழல் பற்றியும் தனது கதைகளுக்கான சமூக காரணிகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டு தனது கதைகளுக்கு களம் தந்து வளர்த்து விட்ட பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும், தனது கதைகளைத் தொகுத்து நூல் வடிவில் வெளியீடு செய்த ஜீவநதி பதிப்பகத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இறுதியில் திருமதி சிவாஜினி ஜெயக்குமாரின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தவர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள். அந்நிகழ்வில் தன்னிடமிருந்த நூல்களை வவுனியா பல்கலைகழக நூலகத்திற்கு அவர் அன்பளிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

விமல் பரம் அவர்களின் முதலாவது தொகுதி ‘தீதும் நன்றும்’. திருமதி விமலாதேவி பரமநாதன் எனும் இயற்பெயரையுடைய விமல் பரம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் குமரபுரத்தில் பிறந்தவர். இவர் ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து யாழ் இந்து மகளீர் கல்லூரியிலும் கல்வி கற்றார். சிறு வயதிலிருந்தே கலை இலக்கியங்களிலும் புத்தகம் வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இவரின் முதல் சிறுகதை 2014 ம் ஆண்டு தமிழ் அவுஸ்ரேலியன் மாத இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து ஒரு பேப்பர், ஞானம், சிறுகதை மஞ்சரி, ஜீவநதி, தினக்குரல், தாய்வீடு, வணக்கம் லண்டன், காற்றுவெளி, நடு, பதிவுகள் என்பனவற்றில் பிரசுரமாகியிருக்கின்றன.
சிறுகதை சஞ்சிகையின் ஆசிரியர் திரு மு. நற்குணதயாளன் அவர்களினால் இவரது ‘சுகமும் சுமையும்’ ‘யார்க்கெடுத்துரைப்பேன்’ என்ற இரண்டு சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை 35 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் சில கதைகளுக்குப் பரிசுகளும் கிடைத்திருக்கின்றன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி 2019 ல் மூன்றாவது பரிசு, ஞானம் சஞ்சிகை ஒவ்வொரு ஆண்டும் நடாத்தும் ‘அமரர் செம்பியன் செல்வன்’ ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி 2019, 2020, 2021, 2023 ல் பாராட்டுப் பரிசும்,
கிளிநொச்சி பாலு மகேந்திரா நூலகம் நடாத்திய சிறுகதைப் போட்டி 2021ல் பாராட்டுப் பரிசும்,
துகள் நடாத்தும் சிறுகதைப் போட்டி 2024 ல் பாராட்டுப் பரிசும் இவருக்கு கிடைத்திருக்கின்றன.
இவருடைய 15 சிறுகதைகளை உள்ளடக்கிய ‘தீதும் நன்றும்’ என்ற சிறுகதைத் தொகுதியை ஜீவநதி பதிப்பகம் மூலம் திரு க. பரணிதரன் வெளியீடு செய்திருக்கிறார்.






