கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியைக் கொண்டாடுங்கள்-சம்பந்தன்

கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட இம்முறை
வீடுகளிலிருந்தே தீபாவளியைக் கொண்டாடுங்கள்
மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

“இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ்வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில் நாம் கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்வது எமது அனைவரது நல்வாழ்வுக்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பவதிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகைத் தினத்தை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக்
கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலை முறியடிப்போமாக!” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.