இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை: சகோதரர் இருவர் உட்பட நால்வர் கைது!
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கல்கிஸை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸை – இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வெளியே இழுத்துச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே மேற்படி நால்வரும் கல்கிஸைப் தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கத்தி மற்றும் வாள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
