வெலிகம தவிசாளர் படுகொலை: துப்பாக்கிதாரி உட்பட 7 பேர் கைது!
மாத்தறை மாவட்டம், வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர படுகொலை தொடர்பில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, அனுராதபுரம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே நேற்று இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்றுm பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் கொழும்பு – மகரகம – நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
முன்னதாக, துப்பாக்கிதாரியின் மனைவியும் துப்பாக்கிதாரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றவரும் அவர்கள் மறைந்திருக்க உதவிய நபருமாக மூவர் அனுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது துப்பாக்கிதாரி தப்பிச் சென்றிருந்தார் என்று கூறப்பட்டது. அத்துடன், அங்கு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், 12 இலட்சம் ரூபா பணம், ஐஸ் போதைப்பொருள் என்பவையும் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, இந்தக் கொலை தொடர்பில் மாத்தறை மாவட்டத்திலும் நேற்று பிற்பகல் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தவிர, இந்தக் கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஓட்டோ சாரதி ஒருவர் காலி – ஹியாரே பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
