ரூ. 20 இலட்சம் ஒப்பந்தத்தின் பிரகாரம் வெலிகம தவிசாளர் சுட்டுப் படுகொலை – துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை.

மாத்தறை மாவட்டம், வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி, 20 இலட்சம் ரூபாவுக்கான ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“டுபாய் லொக்கா” என்ற நபர் இந்த ஒப்பந்தத்தைத் தனக்கு வழங்கினார் என்று துப்பாக்கிதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள், அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பிரிந்து செல்லும் காட்சிகள் சிசிரிவி கமராக்களில் பதிவாகியிருந்தன.

அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கெகிராவ, பொனேகம பகுதியில் கைவிடப்பட்டிருந்த வீடொன்றில் மறைந்திருந்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

எனினும், துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்பட்ட நபர், பொலிஸாருடன் போராடித் தப்பிச் சென்றார்.

துப்பாக்கிதாரி
கைதானது எப்படி?

கெகிராவையில் இருந்து தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி கொழும்புக்கு வந்துள்ளமை தொலைபேசித் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து கொழும்பின் பல பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.

சந்தேகநபர் பொரளை, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது, தனது தோற்றத்தை மாற்றும் நோக்கில் தலைமுடியை வெட்டி, தனது உடைகளையும் மாற்றிக் கொண்டுள்ளார். அவர் அங்கு ஏதோ ஒரு போதைப்பொருளை உட்கொண்டார் என்றும் தெரியவந்தது.

மேலும், சந்தேகநபர் தனது கைபேசிக்கு மின்னேற்றம் செய்து கொள்வதற்காக அதனைத் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்திருந்தார். பொலிஸ் சோதனையின்போது, அந்தத் தொலைபேசி மீட்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், தொலைபேசித் தரவுகளின் கண்காணிப்பு மூலம், சந்தேகநபர் இராஜகிரிய பகுதிக்குச் சென்று மாலை 6 மணியளவில் மஹரகம, நாவின்ன பகுதிக்குச் சென்றமை தெரியவந்தது.

அதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் அவர் நேற்றுமுன்தினம் மாலை 6.45 மணியளவில் மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கொலைக்கான ஒப்பந்தம்
மற்றும் பணப் பரிமாற்றம்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகரவைக் கொலை செய்வதற்காக 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தம் பாதாள உலகக் குழு உறுப்பினர் “டுபாய் லொக்கா” என்ற நபரால் வழங்கப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒப்பந்தத் தொகையில் 12 இலட்சம் ரூபா கடந்த 22ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தைப் பெறுவதற்காகவே சந்தேகநபர் நாவின்ன பகுதிக்கு வந்தார் என்று தெரியவந்துள்ளது.

டுபாயில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் ஊடாக, நாவின்ன பஸ் நிலையத்துக்கு எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சந்தேகநபருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியை
பிடித்த சாமர்த்தியம்

நேற்றுமுன்தினம் மாலை 6:30 மணியவில் அந்த இடத்துக்கு வந்த துப்பாக்கிதாரி, பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மஹரகம நோக்கிச் செல்வதற்காக ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, விசேட அதிரடிப் படையினர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கண்காணித்தனர்.

மஹரகம நகரின் மையத்தில் உள்ள அரச மரம் அருகே சந்தேகநபரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் ஓட்டோவில் இருந்து குதித்து, போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஹை லெவல் வீதி வழியாக சுமார் 600 மீற்றர் தூரம் கொழும்பு நோக்கி ஓடி, அருகில் இருந்த வாகனத் திருத்துமிடத்துடனான வாகனத் தரிப்பிடமொன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அதன்போது, அங்கு இருந்த நபர்களின் உதவியுடன் பொலிஸ் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மாலை 6:45 மணியளவில் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

தனிப்பட்ட அடையாளங்கள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் இடது கையில் முழங்கைக்குக் கீழ் “ஹிதுமதே ஜீவிதய” (இஷ்டப்படி வாழும் வாழ்க்கை) என்றும், வலது கையில் “அனுராதா” என்றும், மார்பின் இடது பக்கத்தில் மனைவியினுடையது எனக் கருதப்படும் பெயரையும் வலது பக்கத்தில் “சசந்தி துவ” (சசந்தி மகள்) என்றும் பச்சை குத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.