பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்! – சஜித் அணி எம்.பி. ஜகத் விதான அறிவிப்பு.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, பொலிஸ்மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய கூறியமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. மாறாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனான எனது தொடர்பு காரணமாக ஏற்பட்டது என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தக் கூற்று ஆதாரமற்றது. இது எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது.
எனக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நான் 1989 ஆம் ஆண்டு முதல் சட்டபூர்வமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
இந்த வார ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல் குறித்து நான் கவலை தெரிவித்ததன் பின்னர், சபாநாயகரின் தலையீட்டின் மூலம் எனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் பொலிஸ்மா அதிபர் கோபமடைந்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர், எனக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்க முயற்சிக்கின்றார். இதன் மூலம் எனது உயிருக்கு அதிக ஆபத்து ஏற்படுகின்றது.
இந்தப் பொறுப்பற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்காகப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.” – என்றார்.
