நாமலின் கைது பழிவாங்கல் அல்ல! – சாதாரண சட்ட நடைமுறையே என்று வாசு கருத்து.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும். எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.
அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை. சட்டத்தை அமுல்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்.” – என்றார்.
