கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்!
இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியசை் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரான இளைஞர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 523 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
