‘பட்ஜட்’ இன்று முன்வைப்பு நாளை விவாதம் ஆரம்பம் – டிசம்பர் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவு – செலவுத் திட்ட உரை/ வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான முழுமையான விவாதம் (வரவு – செலவுத் திட்ட விவாதம்) நாளை (நவம்பர் 8 ஆம் திகதி) தொடக்கம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நாளை 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் 14 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இடம்பெறும்.

இந்தக் காலப் பகுதியில் அரச விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும். அத்துடன், குழுநிலை விவாதம் நடைபெறும் காலப் குதியில் திங்கட்கிழமைகளில் முற்பகல் 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் முற்பகல் 9 மணிக்கும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதற்கமைய, இக்காலப் பகுதியில் ஒவ்வொரு நாளும் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இக்காலப் பகுதியில் பிற்பகல் 6 மணி வரையும் வரவு – செலவுத் திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பிற்பகல் 6 மணி முதல் 6.30 மணி வரையான காலப் பகுதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் தொடர்பான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.