நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை! – 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் இரண்டு படகுகளுடன் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் மன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான் நளினி சுபாஸ்கரன், 26 மீனவர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதேநேரம், இரண்டு படகுகளின் ஓட்டிகளுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபா அபராதத் தொகையும் செலுத்துமாறும், அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் நீதிவான் தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.