பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கினால்கூட அதனை நாங்கள் ஆதரிப்போம்!

“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை எதிரணி எதிர்ப்பதாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் தர்க்கம் ஏற்புடையது அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்கப்பட்டால்கூட அதனை நாம் ஆதரிப்போம்.”

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:-

“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு எதிரணி எதிர்ப்பு இல்லை. எனவே, வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை எதிர்ப்பவர்கள் என ஆளுங்கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் தர்க்கத்தை ஏற்க முடியாது. அப்படியானால் பாதீட்டில் சம்பள விடயம் மட்டும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

2 ஆயிரத்து 138 ரூபா நாள் சம்பளம் அவசியம் என ஜே.வி.பியின் தொழிற்சங்கவே வலியுறுத்தி இருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்கப்பட்டால்கூட அதனை நாம் எதிர்க்கமாட்டோம். ஆனால், சம்பள உயர்வை வழங்குவதற்குரிய நடைமுறை உள்ளது. சட்ட ரீதியில் அவர்களுக்கு சம்பள உரிமையை வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.