சம்பள அதிகரிப்புடன் நின்றுவிடாது பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள் – அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதுபோல், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் என்று அரசை வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
ஊடகங்களுக்கு இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை எடுத்துரைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போதைய 1,350 ரூபா சம்பளத்துடன், 400 ரூபா அதிகரிப்பை வரவு – செலவுத் திட்டத்தில் அரசு முன்மொழிந்துள்ளது. சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் 200 ரூபாவையும், அரசு 200 ரூபாவையும் செலுத்தும் தீர்மானத்துக்கு வந்துள்ளது.
துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்டச் சமூகத்தினருக்கு, இந்த 400 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
பெருந்தோட்டச் சமூகத்துக்குச் சம்பளம் கிடைத்தால், அது ஒரு நல்ல விடயமாகும். அவ்வாறே இது சாதகமான விடயமுமாக அமைந்து காணப்படுகின்றது. அரசால் இவ்வாறு நிதிகளை ஒதுக்க முடியும்.
கோவிட் – 19 தொற்றுநோய் ஏற்பட்ட சமயம், வீழ்ச்சி கண்ட தொழிற்றுறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஐக்கிய இராச்சிய அரசு நிதியை ஒதுக்கீடு செய்தது. இவ்வாறு நிதிகளை ஒதுக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதால் மாத்திரமல்லாது, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும், முற்றுலுமே பயன்படுத்தப்படாத காணிகளில் பயிரிடுவதற்கான உரிமையை வழங்கி, அவர்களைச் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் பெருந்தோட்டச் சமூகத்தை வலுப்படுத்த முடியும்.
இன்று, தோட்டத் துறையில் 60 – 70 வீத காணி உரிமைகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகக் காணப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியில் இத்தரப்பு 30 வீதத்தை விடவும் குறைவான பங்களிப்பை மாத்திரமே பெற்றுத் தருகின்றது. மறுபுறம், 30 வீத காணி உரிமைகளைக் கொண்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், நாட்டின் தேயிலை உற்பத்தியில் 60 – 70 வீதமான பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர்.
பயிரிடப்படாத காணிகள் அரசு மற்றும் கம்பனிகளிடம் காணப்படுவதால், இவற்றை வேலையில்லாப் இளைஞர்களுக்கும், தோட்டச் சமூகத்தினருக்கும் பிரித்து வழங்கி, அவர்களுக்கு காணி உரிமைகளை வழங்கி, தேயிலை உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, தற்போதைய 1350 ரூபா சம்பளத்துடன், மேலும் 400 ரூபாவை அதிகரிப்பதை நான் எதிர்க்கவில்லை. எதிர்க்கப்போவதுமில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் 400 ரூபா செயற்படுத்தப்படுவதே விரும்பத்தக்கது.
பயிரிடப்படாத, பயன்படுத்தப்படாத தரிசு காணிகளை இந்த மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து, செய்கைகளுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு செய்தால், தமது சொந்தக் காணியில், அவர்களுக்கென சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடியும். ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் நிலைப்பாடு இதுவாகவே அமைந்து காணப்படுகின்றன.
இது இரு ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில் (விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும். இதுதான் எமது செல்லுபடியான கொள்கையாகும். எனவே, இது தொடர்பான ஏனைய கருத்துக்களைப் புறந்தள்ளி வைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையைச் சமூகமயப்படுத்துவது நமது கடமையாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலேனும் நாடாளுமன்றத்தில் விசேட கருத்தை முன்வைக்க இன்று எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்த நிலைக்கு நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.” – என்றார்.
