‘சமஷ்டி’ தீர்வைக் கோரி தமிழகத்தை நாடுகின்றது தமிழ்த் தேசியப் பேரவை.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ்த் தேசியப் பேரவை அணுகத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசம், இறைமையுடனான சமஷ்டியைக் கோர தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக தொல். திருமாவளவனுடனான சந்திப்பு அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசு தவறான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம்
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு விட்டனர் என்றும், அதனால்தான் தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர் என்றும், தங்கள் தீர்வையே தமிழ் மக்களும் ஏற்கின்றனர் என்றும் இலங்கை அரசு பிரசாரம் செய்து வரும் நெருக்கடி மிக்க காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பாகப் பேசப்படுகின்றது.

இனப்பிரச்சினை தொடர்பாக பேசும் போது நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட ஏக்ய ராஜ்ய அரசமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என தேசிய மக்கள் சக்தி கூறி வருகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டுக்கு வந்து அறுதிப் பெரும்பான்மையைக் காட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியுடன் நாம் பேச முயற்சித்தோம். அந்த முயற்சி சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக வந்த பிறகு முறிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச நடவடிக்கை எடுக்கும் தருணத்தில் தொல். திருமாவளவனுடன் எமது சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் இனப்பிரச்சினைக்கு இந்திய நிலைப்பாடு முக்கியம். இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக
உத்தியோகபூர்வமாக இலங்கை அரசை ஏற்க வைத்த ஒப்பந்தமாகும்.

அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றிய 13 ஆம் திருத்தம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை மறுத்தது.

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை ஒற்றையாட்சிக்குள் 38 வருடங்களாக முடக்கப்பட்டு தமிழ் மக்கள் எந்தப் பலனையும் அடையாமல் இருக்கும் சூழலில் இந்தியா தவறான நிலைப்பாட்டை வலியுறுத்துவது எமக்குப் பலவீனத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால்
இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியா பலமாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து போகாமல் இலங்கையின் மிக மோசமாகியுள்ள பொருளாதாரத்தை மீள உயர்த்த முடியாத நிலை உள்ளது. இது இந்திய மத்திய அரசின் பேரம் பேசலுக்கான தன்மைகளை அதிகரித்துள்ளது. அதனைப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் தொல். திருமாவளவனைச் சந்தித்து இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தினோம்.

அவர் தமிழக ஆட்சியில் முக்கிய பங்காளி. ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பாக தி.மு.க. ஆட்சியில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவருடன் பேசினோம்.

ஈழத்தமிழர் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை
தமிழக அரசு எடுக்க வலியுறுத்துவதற்குத் தொல். திருமாவளவன் அத்தியாவசியம்.

விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று வரை இன அழிப்புக்கு முகம் கொடுக்கின்றோம். தற்போது உயிர்கள் போகாவிட்டாலும் கூட தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிக் கொண்டு வருகின்றது. பொருளாதார ரீதியிலும் தமிழர் தேசம் பலவீனப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்த பின்னர் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பில் தமிழக அரசு அமைதியாக இருப்பது ஈழத்தமிழர்களைப் பலவீனப்படுத்தி இன அழிப்புக்கு உள்ளாக்கும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ்த் தேசியப் பேரவை அணுகத் திட்டமிட்டுள்ளது. தமிழ்த் தேசம், இறைமையுடனான
சமஷ்டியைக் கோர தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக தொல். திருமாவளவனுடனான சந்திப்பு அமைந்தது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.