திருமலையில் அடாத்தாகப் புத்தர் சிலை இரவோடு இரவாக உடனே அகற்றப்பட்டது.

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் நேற்றிரவு பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் உடனடியாக அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது.

பௌத்த பிக்குகள் புத்தர் சிலையை அடாத்தாக வைத்தமைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கப் பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேற்று நள்ளிரவு சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், தமது வேண்டுகோளின் பிரகாரம் குறித்த புத்தர் சிலையை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தமைக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“இரவு 8 மணியளவில் அடாவடியாகப் புத்தர் சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது.

இதையடுத்து 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தப் புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது.” – என்று இரா. சாணக்கியன் எம்.பி. அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை காலை திருகோணமலை மாநகர சபை உறுப்பினர்களை நகர சபையில் ஒன்றுகூடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.