இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில் இந்திய அரசு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அனர்த்த நிவாரண உதவிகளுக்காக இந்தியா ‘சாகர் பந்து நடவடிக்கை’யை ஆரம்பிக்கப்பட்டதையும் வரவேற்றார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்கும் அப்பாலானது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கலாசார, வரலாற்று மற்றும் சமயத் தொடர்புகள் விளங்குகின்றன. வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மிக முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது.
பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணி, மேலும் வலுப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்ற மற்றும் அரச துறைகள் உள்ளிட்ட திறன் அபிவிருத்தித் துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது நிறுவன ரீதியான ஆற்றல்களைப் பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.” – என்றார்.
சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அறிவுப் பரிமாற்றம், புத்தாக்கம் மற்றும் திறன் அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்காக, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற விசேட கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் உட்பட இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் கலாநிதி அமித் தெலாங், இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







