திருமலை புத்தர் சிலை விவகாரம்: நாடாளுமன்றில் அமைதியின்மை!

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்குச் சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்குத் தனக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லையென அதற்கு எதிராகத் தயாசிறி எம்.பி. கடும் கோஷங்களை எழுப்பிய நிலையிலேயே சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பிப்பு மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் பிரதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க எழுந்த வேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி அமைச்சரிடம் சில விடயங்களை முன்வைத்து, “அரசமைப்பின் 9ஆவது சரத்துக்கமைய இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன், அதன் 10 மற்றம் 14ஆம் பிரிவுகளுக்கமைய மதங்களுக்குரிய உரிமைகளை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் சில விடயங்களைக் கேட்கின்றேன்” என்றார்.

தொடர்ந்து உரையாற்றுவதற்குத் தயாசிறி எம்.பி. அனுமதி கோரிய நிலையில் அதற்குச் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்காமல் பிரதான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

இவ்வேளையில் தயாசிறி எம்.பி. ஆவேசமாகச் சபாநாயகரை நோக்கிக் கருத்துக்களைக் கூறிக்கொண்டிருந்தார். இதனால் சில நிமிடங்கள் சபையில் அமைதியின்மை நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.