ஆளும் கட்சியின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதே அவசியம் : பாரிஸ்

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய கல்வியின் துயர் துடைப்பதற்கு ஆளும் கட்சியில் இருந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதே மிக அவசியமாகும். அதற்குரிய நாள் 5 ஆம் திகதி குறிக்கப்பட்டுளளது என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.

தெவிநுவர கல்வி வலயத்திற்கு உட்பட அதிபர் ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம் கண்டி எலமல்தெனிய பேல்ட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
முஸ்லிம் தலைமைகள் சரியான அரசியல் பாதையில் இருந்து விலகிச் செல்வதால் எமது கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய கல்வியின் துயர் நிலையைத் துடைப்பதற்கு யாருமற்ற வெற்றிடமொன்று காணப்படுகிறது. இதன் மூலம் எங்கள் மேல் கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள் எங்களை ஆள முற்படும் ஓர் இக்கெட்டான ஒரு சூழலில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதன் உயிர்ப்பை பேணா விட்டால் முஸ்லிம்களுடைய எதிர்காலம் வெறும் சூனியமாகவே மாறிவிடும் அபாய நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் கல்வி சார் சமூகம் பொறுப்புக் கூற வேண்டி வரும் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியை முஸ்லிம்கள் வேண்டாப் பெண்டாட்டி மாதரி எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்ற நிலையை மாற்றியமைக்க வேண்டிய ஒரு இக்கெட்டான கட்டத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அரசியலில் கவனம் செலுத்தா விட்டால் எங்கள் மேல் கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள் எங்களை ஆள நேரிடும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய முஸ்லிம் தலைவர்கள் கவனமாக இருக்கவில்லை. எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செய்த தவறுகளின் காரணமாக இன்று நாங்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எம்மை கவனிப்பதற்கு யாரும் இல்லை.

மியன்மாரிலும் இதே போன்று நடைபெற்றது. எமது முஸ்லிம் சமூகம் அந்நாட்டில் மிக நன்றாக இருந்தார்கள். அவர்களுடைய உரிமைகள் பாராளுமன்றத்தில் இல்லாமற் போயிற்று. இரண்டாவது அவர்களுடைய பொருளாதாரம் , மூன்றாவது அவர்களுடைய கல்வி நிலையாகும். அதேபோன்று அடுத்த பெரும்பான்மையான சமூகத்தினர்கள் அவர்களை வெறுக்க முற்பட்டனர். அதேபோன்று புதிய தலைமுறையினர்கள் பழையவர்கள் மீது விரலை நீட்டி மூத்த சமூகத்தினர் பிழையான வழிகளைக் காட்டி விட்டுச் சென்று விட்டனர் என்று கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விட்டனர்.

இப்படியான நடவடிக்கைகள் எமது முஸ்லிம் சமூகத்திற்கு நடக்கலாம். இன்றுள்ள எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம்மை பிழையாக வழிநடாத்தி செல்லுகின்றார்கள் . உண்மையிலேயே எமது எதிர்கால சந்ததியினர்கள் எங்கள் மீது நாளை குற்றம் சாட்டுவார்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.

1956 களில் கலாநிதி பதியுதின் மஹ்மூத் அவர்கள் கூறினார்கள் எஸ். டப்லியு. ஆர். பண்டாரநாயக அவர்கள் அவர்கள் முன்னெடுத்த கொள்கை சரியானது . நல்லதொரு எதிர்காலம் ஒன்று உருவாகும். நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார். ஆனாலும் அப்போது அவருக்கு எதிராக செயற்பட்டவர்களும் உண்டு. ஆனால் அன்று அவர் எடுத்த சரியான முடிவினால் அவர் வகித்த அமைச்சுப் பதவி, அவர் வழங்கிய ஆசிரியர் தொழில்கள் இன்று வரையிலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை அவர் தன்னுடைய வாக்குப் பலத்தினால் மட்டும்தான் செய்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.