கண்டியில் மண்சரிவு துயரம். ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயங்களுடன் மீட்பு.
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். நால்வர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
காயங்களுடன் மீட்கப்பட்ட நால்வரும் மானவல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் மாவனெல்ல, கல்அனுமா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிலையம் உணவகமொன்று எனத் தெரியவருகின்றது. வீடொன்றுடனேயே இந்த உணவகம் அமைந்திருந்துள்ளது.
கடும் மழை பெய்து வந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது உணவகத்துக்குள் 9 பேர் வரை இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
30 பேரடங்கிய இராணுவக் குழுவொன்று மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு இடம்பெற்ற பகுதி மண்சரிவு அபாய வலயம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
