தமிழ் வர்த்தகரின் உணவகமே கண்டி மண்சரிவில் சிக்கியது!

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று தமிழ் வர்த்தகர் ஒருவரின் உணவகமே மண்சரிவில் சிக்கியுள்ளது.

பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்றுக் காலை வீட்டுடன் சேர்ந்த உணவகம் ஒன்றின் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மாவனெல்ல மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த அனைவரும் மாவனெல்ல ஆதார மருத்துவமனையின் 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்சரிவு ஏற்பட்ட போது காலை உணவுக்காக வந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 10 பேர் உணவகத்தில் இருந்துள்ளனர் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட போது உணவகத்தின் உரிமையாளர் அவசர தேவைக்காக வெளியில் சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உணவகத்தின் உரிமையாளர் 40 வயதான குழந்தைவேல் ரகுநாதன் சசிதரன் ஆவார்.

இந்த அனர்த்தத்தில் அவரின் மனைவியான நிஷாந்தினி சசிதரன் (வயது 39) மற்றும் மனைவியின் தந்தை இராசலிங்கம் கருணாகரன் (வயது 66) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிர் தப்பித்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காகப் பொலிஸார், இராணுவத்தினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட குழுவினர் பல மணிநேரம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேர் காயங்களுடன் வெளியே கொண்டு வரப்பட்டு, பொலிஸாரால் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த மண்சரிவு அனர்த்தத்தில் உணவகத்தில் நேநீர் பருகிக் கொண்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு மதுசங்க சமரகோன் (வயது 31) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்:-

01. இராசலிங்கம் கருணாகரன் (வயது 66, கடுகண்ணாவ)
02. நிஷாந்தினி சசிதரன் (வயது 39, கடுகண்ணாவ)
03. லிண்டன் ஜானக குமார ஜயசிங்க (வயது 60, கடுகண்ணாவ)
04. ருவன் குமார அபேசிறி சமரநாயக்க (வயது 43, எம்பிலிப்பிட்டிய)
05. குணரத்ன முதியன்சேலாகே புலஸ்தி பண்டார (வயது 33, கம்பளை)
06. லஹிரு மதுசங்க சமரகோன் (வயது 31, கல்அமுன)

காயமடைந்தவர்களின் விவரம்:-

01. உணவக ஊழியரான மீகாகெதர சம்பத் பண்டார ஜயரத்ன (வயது 44, வட்டப்பள)
02. லஹிரு ருமேஷ் ரத்னாயக்க (வயது 33, பிலிமத்தலாவ)
03. ருசிர திலான் முனசிங்க (பிலிமத்தலாவ)
04. சந்திரிகா வசந்தி (வயது 56, ஹாலியத்த)

Leave A Reply

Your email address will not be published.