கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராகப் போராடியவர் டிப்பர் மோதி உயிரிழப்பு – திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்.

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராகப் போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு, மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபநாத் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் ,கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த நிலையில் நேற்று புதன்கிழமை மனைவியுடன், இரணைமடுப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை பின்னால் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியது.

அதன்போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி டிப்பர் வாகனத்தைக் கண்ணுற்று மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் தப்பித்துக் கொண்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிப்பர் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.