ஆபத்தான நிலை நீடிப்பதால் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்! – சிரேஷ்ட புவியியலாளர் அறிவுறுத்தல்.
இலங்கையில் நிலவும் கடுமையான காலநிலை காரணமாக ஆபத்தான நிலை நீடிப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரித்துள்ளார்.
கண்டி, கேகாலை, மாத்தளை, குருநாகல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயத்துக்கான சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போதைய அனர்த்த சூழ்நிலையில், மக்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதாகும்” – என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆபத்துகள் இருந்தபோதிலும், வார இறுதிச் சுற்றுலாக்களுக்குச் செல்வது சாத்தியமா என்று பொதுமக்கள் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்து விசாரித்த பல அழைப்புகள் கிடைத்துள்ளன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
