வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கவேமாட்டோம் – இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துக் கூறியபோது ஜனாதிபதி இப்படி உறுதி.
வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியாகத் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மீன்பிடித்துறை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. புயல் காரணமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும். வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – என்று உறுதியாகத் தெரிவித்தார்.
