ரணிலுக்குச் சார்பான நபராகக் கருத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பான பதவியில் இருந்த அவர் முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அவரின் அறிவிப்புகள், பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியிருந்தது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல் நிலை தொடர்பான தகவல்களை அவருக்கு ஆதரவாக இவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான நபராகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்புமிக்க பதவியில் உள்ள ஒரு அரசு வைத்திய அதிகாரியாக இருந்து கொண்டு, உரிய அனுமதி அல்லது ஒப்புதல் இன்றிப் பல்வேறு ஊடகங்களுக்கு கருத்துகள் மற்றும் அறிக்கைகள் வழங்கியதாக வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருத்துகள் மற்றும் ஊடகப் பேச்சுகள், நாட்டில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. அத்தகைய கருத்துக்கள் பொதுமக்களிடையே அமைதியின்மை மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய மற்றும் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.