அநுர அரசு இன்னும் ஓராண்டில் கவிழும்! – இப்படி அர்ச்சுனா எம்.பி. ஆரூடம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இன்னும் ஓராண்டில் கவிழும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை பொலிஸாரால் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பிக்குப் பிற்பகல் பிணை வழங்கப்பட்டது.

பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏனைய சபைகளிலும் இந்த நிலைமை ஏற்படலாம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனும் கப்பலில் தற்போது ஓட்டை விழ ஆரம்பித்துள்ளது. அந்த ஓட்டையை மூடுவதற்கு நாமும் முயற்சித்தோம். எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை.
இன்னும் ஓராண்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி கவிழும்.

எனக்குக் கொழும்பில் அரசியல் செய்யும் திட்டம் இல்லை. வடக்கு மக்கள் என்னை இங்கு அனுப்பமாட்டார்கள்.

அதேவேளை, தையிட்டி விகாரையை இடிக்குமாறு நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி கூறுகின்றார். அவரின் அரசியலால் மக்கள் மத்தியில்தான் குழப்பம் ஏற்படப் போகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.