தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி போலியாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை! – நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி பகிரங்கக் குற்றச்சாட்டு.
“யாழ். வலிகாமம் வடக்கு – தையிட்டிப் பகுதியில் திஸ்ஸ விகாரை போலியாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போலி விகாரை அமைந்துள்ள காணியானது தமிழ் மக்களுக்குச் சொந்தமானது.”
இவ்வாறு நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பதும தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியானது காங்கேசன்துறை – தையிட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமானதாகும்.
யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்தின்போது தமிழ் மக்களின் காணிகள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் அங்கு சட்டவிரோதமாகவே திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை, இங்கு யுத்த காலத்தில் இருந்து மிக நீண்டகாலமாக வாழும் நாகவிகாரையின் விகாராதிபதியான எனக்கு மட்டுமே தெரியும். ஆகவே, எமது நாட்டில் உள்ள மக்கள் இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. விடயங்களை ஆராய்ந்து நாம் செயற்பட வேண்டும்.
இந்தநிலையில் வடக்குப் பிராந்தியத்துக்கான பிரதான சங்கநாயக்க தேரருக்கான பதவியை, போலியாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். பௌத்த தர்மத்துக்கு மாறாக அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நான் 53 வருடங்களாக இங்குள்ள தமிழ் மக்களுடனேயே நயினாதீவிலேயே தங்கியுள்ளேன். மிகவும் சமாதானமாகவும் அன்பாகவும் தமிழ்ச் சகோதரர்களுடன் நாங்கள் ஒன்றாக வாழ்கின்றோம்.
எனினும், தற்போது தையிட்டி பகுதிக்குத் தேரர் ஒருவர் வருகை தந்து, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, விகாரைக்கான புதிய கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
எனவே, இலங்கைவாழ் அனைத்து மக்களும் எவ்வித சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்ளாது, சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
அரசு இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை எடுப்பது சிறந்தது என்பது எனது கருத்தாகும்.
இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற வகையில் கருத்துக்களைப் பகிர வேண்டாம் என ஏனைய தேரர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடித் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லாவிடின், இந்த விடயம் பெரும் பூதாகரமாகும்.
அதன்போது தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார்.
