தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்தோருக்கு மாற்றுக்காணிகளே தீர்வு! – அரசு திட்டவட்டம்.
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொதுமக்களுக்கு மாற்றுக்காணிகளைப் பெற்றுக்கொடுப்பது அல்லது இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தையிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கின்றோம். ஆனால், குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால், அரசு என்ற வகையில் இந்தப் பிரச்சினையை நீடிக்காமல் முடிவுறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு அவர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது அரசின் நிலைப்பாடு.
இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்குக் கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கின்றன என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சினையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கின்றார்கள்.
நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசு பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக்கூடாது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காகக் காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளே பெற்றுக்கொடுக்கப்படும். இந்த நிலைப்பாட்டில் அரசு திடமாக இருக்கின்றது.” – என்றார்.
