ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டம்: நாடெங்கும் நினைவேந்தல் நிகழ்வு!
சுனாமி எனும் ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நாடு முழுவதும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு காலி மாவட்டத்தின் பெரலிய சுனாமி நினைவுத்தூபியில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.

சுனாமிப் பேரழிவில் கொல்லப்பட்டவர்களை நினைவேந்தும் விதமாக இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை நாடு முழுவதும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு அதிகளவு மக்கள் உயிரிழந்த வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளைப் படையலிட்டு உறவுகள் கதறியழுதவாறு தமது சொந்தங்களை அஞ்சலித்தனர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நாட்டைத் தாக்கிய சுனாமி பேரழிவில் 35 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்தனர். ௨௧ ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர்.

ஆழிப்பேரலை நாட்டின் 14 மாவட்டங்களைத் தாக்கியது. இதில், வடக்கு, கிழக்கு மாகாணங்களே அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுமாத்திரா தீவுக்கு அண்மையாக கடலில் 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது.

இலங்கை, இந்தியா, இந்தோனேசியா உட்பட 6 நாடுகளைத் தாக்கிய இந்த ஆழிப்பேரலையால் ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 167 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் பேர் வரை காணாமல்போயினர் அல்லது அவர்களின் மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




