கொழும்பில் கலாமித்ரா விருது விழா.
கலை, இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்குக் களம் அமைப்பதைப் பிரதான செயற்பாடாக் கொண்டு தலைநகரில் கடந்த 45ஆண்டுகளாக பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி 46ஆவது ஆண்டுக்குள் காலடி பதிக்கின்றது.
பணிகளின் வரிசையில் 1995ஆம் ஆண்டு முதல் இளையோருக்கான கலை,கலாசாரப் போட்டிகளை நடத்தி விருதளித்து ஊக்குவித்து வரும் இந்த அமைப்பு இதன் 20ஆவது ஆண்டின் தொடராக கலாமித்ரா விருது விழாவை வரும் 30 ஆம் திகதி கொழும்பு – 11 செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடத்துகின்றது.
இந்த விழாவுக்கு அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா தலைமை ஏற்கின்றார்.
இதில் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் ஹாசிம் உமர் கலந்துகொள்கின்றார்.
இந்த நிகழ்வினில் கலை, கலாசாரப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 25 பேருக்கு வெற்றியாளர் விருதும், கலை, இலக்கிய படைப்பாக்கங்களில் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வரும் பத்து துறைகளைச் சார்ந்த பத்து பேருக்கு கலாமித்ரா விருதும், சமூக மற்றும் கலை ஊடகப் பணிகளில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் 15 பேருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வு புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகத்தின் தலைவர் ஷண்மு, செயலாளர் சி.அழகேஸ்வரன் மற்றும் பொருளாளர் ரவிராம் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒருங்கமைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
