வவுனியாவில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்.
உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருவதுடன், வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்குக்கிணங்க, நாளை வியாழக்கிழமை, உழவர் திருநாளான தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடவுள்ளனர்.
இந்தநிலையில், வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகையின் வியாபாரம் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வவுனியா நகரில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன், பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழ வகைகள் போன்ற பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தை விட, இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.










