திருமலை புத்தர் சிலை வழக்கில் இன்று 4 பிக்குகள் உட்பட 9 பேருக்கு மறியல்! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பெளத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலாங்கொட வனவாசி கசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்களை இன்று திருகோணமலை நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் கரையோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி கடற்கரையில் கட்டுமானத்தை அமைத்தமை மற்றும் சிலையை வைத்தமை தொடர்பில் வனவாசி பலங்கொட கசியப்ப தேரர், திருகோணமலை கோட்டை விகாராதிபதி கல்ஞான வன்ச திஸ்ஸ தேரர், சுகித்த வன்ச தேரர். சிறிமாபுர விகாரையைச் சேர்ந்த நந்த தேரர் ஆகிய தேரர்களுக்கும், கோட்டை விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தீபானி லியனகே, விதுரங்க லொக்கு கலப்பதி, எல்.ரீ.பெரேரா, பியலால் பிறேமசிறி, தெக்கும் துலார குணதிலக்க ஆகியோருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் திருகோணமலை விளக்கமறியல் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுதிப்ப லியனகே,சுகத் பிரசன்ன ஆகிய மேலும் இருவர் எதிரிகளாக பெயரிடப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கவில்லை. இவர்கள் இருவர் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி ஒருவரும், பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

கரையோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்துக்கு இல்லை. மேல்நீதிமன்றத்துக்கு மட்டுமே பிணை வழங்கும் அதிகாரம் உள்ளது. இதனால் இன்று எதிராளிகளைப் பிணையில் விடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் பிணை வழங்கப்படவில்லை.

சர்ச்சைக்குரிய இடத்தில் மேசை ஒன்றின் மீது புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் மீது அஸ்பெஸ்டேட் சீற் போடப்பட்டு ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொட்டகையே கரையோரப் பாதுகாப்புக் கட்டளைச் கட்டத்தை மீறி அமைக்கப்பட்டதாக இன்றைய வழக்கில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மேசையில் வைக்கப்பட்ட சிலை அல்ல, அந்தக் கொட்டகையை அகற்றுவது தொடர்பான ஏற்பாட்டுக்கு இணங்காத நிலையிலேயே எதிராளிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தக் கொட்டகையை இன்று உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் அறியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.