வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31 ஆயிரத்து 218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

நீண்டகாலமாகத் தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல்.பி.குமுது லால் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம.பிரதீபன், மாவட்ட செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பயனாளிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.