‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் செயற்பாடு யாழில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

இலங்கையின் தேசிய பேரழிவாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நேற்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இம்மாபெரும் மக்கள் பேரணியில் ஜனாதிபதி, அமைச்சர்களுடன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் உரை ஆற்றினார்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி, ஜனாதிபதி கௌரவிப்புக்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, போதைப்பொருட்களிலிருந்து விலகி இருப்போம் எனவும், சமூகத்தைப் பாதுகாப்போம் எனவும் உறுதியளிக்கும் ‘சத்தியப்பிரமாணம்’ ஜனாதிபதி முன்னிலையில் ஆயிரக்கணக்கான மக்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலர், மாவட்ட செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பெருந்திரளான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.