தமிழ் மக்களுக்கு தமது பகுதியை தாமே ஆளும் உரிமை வேண்டும்! – முன்னாள் அமைச்சர் ராஜித இடித்துரைப்பு.
“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தேன்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தைப் பாதுகாக்க அவரது அரசில் இருந்தே போராடினேன்.
13 இல் கைவைத்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவேன் எனவும் அறிவித்திருந்தேன்.
13 ஆவது திருத்தச் சட்டம் என்பதைவிட, தமிழ் மக்களுக்குத் தமது பகுதிகளை ஆள்வதற்குரிய அதிகாரம் வேண்டும். இந்த நோக்கில்தானே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.
நல்லாட்சியின்போது தீர்வைக் காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், எமக்கு போதிய பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை.
சமஷ்டி ஒரு பக்கம் இருக்கட்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அதனை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது?” – என்றும் ராஜித கேள்வி எழுப்பினார்.
